கரிவலம்வந்தநல்லூர் கோயில் மண்டபக்கூரையில் வரையப்பட்ட ராசிமண்டலம்

தமிழர்கள் வானியலில் நாள்மீன் என அசுவினி, பரணி போன்ற நட்சத்திரங்களையும், கோள்மீன் என சூரியனை முதன்மையாகக் கொண்டு கோள்களையும், இவை சூழ்ந்து பவனி வரும் மேடம், இடபம், மிதுனம் எனும் மூன்று தெருவாக பன்னிரு ராசிகளையும் குறிக்கின்றனர். அந்த மூன்று வீதிகளில் தலா ஒன்பது நட்சத்திர இருக்கை வீதம் இருபத்து ஏழு நட்சத்திரங்களைக் கொண்ட வானில் ஒன்பது கோள்களும் வலம் வருகின்றன.
சங்க இலக்கியகியங்களில் ஒன்றான பரிபாடலின் பதினொன்றாம் பாடல்
இது வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலம் பற்றியது பாடியவர் நல்லந்துவனார்.
”விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
நெரிதரூஉம் வையைப் புனல். ”
விரிகதிர் மதியம், நிலவு ஆகாயம் முழுவதும் நிறையும் பௌர்ணமி அன்று எரி எனும் கார்த்திகை நட்சத்திரத்தை தன்னுள்ளே கொண்ட இடபம், சடை எனும் சிவனின் நட்சத்திரமான திருவாதிரையை தன்னுள்ளே கொண்ட மிதுனம், வேழம் எனும் யானைக்கு உரிய நாளான பரணியை தன்னுள்ளே கொண்ட மேடம் ஆகிய மூன்று தெரு/வீதிகளைக் கொண்டு அந்த மூன்று வீதிகளில் தலா ஒன்பது நட்சத்திர இருக்கை வீதம் இருபத்து ஏழு நட்சத்திரங்களையும் வானில் வலம் வருகின்றன.
வெள்ளி என்னும் சுக்ரன் ஏற்றியல் என்னும் ரிஷப ராசியில் இருக்க, செவ்வாய் மேடத்தில் இருக்க, பொருள் தெரிந்த புதன் மிதுன இராசியில் இருக்க,
புலர்கின்ற விடியலுக்குச் சொந்தமான சூரியன் தனக்குரிய வீடான சிம்மத்துக்கு மேல் வீடாகிய கடகத்தில் இருக்க, அந்தணனாகிய குரு சனியின் மகரவீட்டிற்கு அடுத்த வீடான கும்பத்திற்கு அடுத்து இருக்கும் மீனத்தில் இருக்க, விதிகாரன் யமன் சனி தனுசுக்கு அடுத்த மகரத்தில் இருக்க, பாம்பான இராகு சந்திரனை மறைக்க.. .இவ்வாறக அமைந்த சந்திரகிரஹண நாளில், பொதிகை முனிவனுக்கு உரியதான மலையில் ( மேற்கு தொடர்ச்சி மலை) காற்று தென்கிழக்குத்திசையில் வீச, சூரியனின் கதிர்கள் விரிந்த வெயில் காலத்தை வெல்லும் பொருட்டு மலைப்பகுதியிடத்தே பெரும் மழை பெய்து வையை ஆற்றில் புதுப்புனல் வந்தது
ஒரே பாடலில் பல செய்திகள். பால்வீதி எனும் வான்வெளியை மூன்று தெருக்களாகப் பிரித்து அதில் இருபத்தேழு நட்சத்திரங்களைக் கொண்டு பன்னிரண்டு ராசி மண்டலங்களைத் தொகுத்திருக்கிறார்கள். அதை அடிப்படையாக கொண்டு கோள்களின் நிலையை விளக்குகிறார் நல்லந்துவனார்.
கோள்களின் தலைவனான சூரியன் கடக ராசியில் இருக்கிறது. எனவே அது ஆடி மாதம். அங்கு பயணிக்கும் புதன் மிதுன ராசியிலும், சுக்கிரன் இடபத்திலும், செவ்வாய் மேஷத்திலும், வியாழன் மீனத்திலும், சனி மகரத்திலும் இருக்கிறன. சூரியனைத் தவிர மற்ற எல்லாக் கிரகங்களும் அதன் சொந்த வீடுகளிலேயே இருக்கின்றன. சந்திரன் கடகத்திற்கு ஏழாம் வீடான மகரத்தில் இருக்கிறது. அன்று பௌர்ணமி. ராகு மறைப்பதால் அன்று சந்திரக் கிரகணம். மேலும் அகத்திய நட்சத்திரம் மிதுனத்தில், அதாவது சூரிய உதயத்திற்குச் சற்று முன்னால் தென் திசையில் உதிக்கிறது. இன்றும் ஆடி மாதத்தன்று அகத்திய நட்சத்திரத்தைத் தென் திசையில் காணலாம். அப்படிப்பட்ட நாளில் தென்மேற்குப் பருவ மழை துவங்கியிருக்கிறது. அதனால் வையையிலும் புனல் வந்திருக்கிறது.
தமிழனின் அறிவியலுக்கும், வானவியலுக்கும், பழமைக்கும் இப்பாடல் ஒரு சான்று.