No:9, 1st Main road, Swarnambigai Nagar, Aruneshwara Flats, Virugambakkam, Chennai
+91 98 777 888 02
info@bookmyiyer.com

கருப்பண்ணசாமி

கருப்பண்ணசாமி

கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி. கறுப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு. சங்கிலி கறுப்பன், கறுப்பனார் சாமி, குல கறுப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கின்றது.

கருப்பன், கருப்புசாமி, கருப்பாயி எனும் பெயர்களைத் தென் தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு பெயராக சூட்டுவது காணலாம். தமிழ்நாட்டு கிராம தெய்வங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமாக கருப்புசாமி இருந்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமங்களே இல்லை எனலாம்.

அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பன். உயர்ந்த உருவமும், கருத்த மேனியும் வேகமான ஓட்டமும், துடியான ஆட்டமும் கொண்டவர். எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர். இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது. நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கறுப்பர். பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் இவர் காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார். பெரியாண்டவர் என்ற பெயராலும் பரவலாக குடி கொண்டுள்ளார்.

ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள், சீதை லவனை மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள். திரும்ப வந்து லவனை சீதை தூக்கி சென்று பர்ணசாலைக்கு வெளியே உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, சீதை சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார். குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து சீதை இரு பிள்ளைகளையும் தன பிள்ளையாகவே வளர்க்கிறாள்.

ராமர் கானகம் வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார், உடனே தீக்குளித்த சீதை அதையே தன்மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கூறப்படுகிறது.

பெரும்பாலும், மது, கஞ்சா, மாமிசம் கொண்டே வணங்கப்படுகிறார். பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புகின்றனர். எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்ப்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர். கருப்பரும் வணங்கும் அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் எப்போதும் காவலாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Need Help? Chat with us
Please accept our privacy policy first to start a conversation.